தினம் ஒரு திருக்குறள்

Tuesday, May 31, 2011

என்ன வேண்டும் எங்களுக்கு? உணவு நிர்வாகத் துறை-(தினமணி பத்திரிகை செய்தி)


அரசின் “உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்- 2006′ விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சந்தேகங்களுக்குப் புதிய அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  நடைமுறையில் உள்ள உணவு கலப்படத் தடைச் சட்டம்- 1954, தாவர எண்ணெய் உற்பத்திச் சட்டம், உணவு எண்ணெய்கள் பதப்படுத்தல் சட்டம், பால் மற்றும் பால்பொருள்கள் உற்பத்திச் சட்டம் உள்பட பல்வேறு உணவு கலப்படத் தடுப்புச் சட்டங்களை ரத்து செய்து, இந்திய மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒற்றைச் சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது “உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்- 2006′.  ஏற்கெனவே, நடைமுறையிலிருந்த உணவு கலப்படத் தடைச் சட்டம் மத்திய அரசின் மருத்துவத் துறை மூலம், தமிழகத்தில் பொது சுகாதாரத் துறையின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. மருத்துவத் துறையின் பல பணிகளில், உணவுக் கலப்படத் தடுப்புப் பணியும் ஓர் துணை பணியாகப் ஏற்கப்பட்டதே தவிர, பிரதான பணியாகக் கொள்ளப்படவில்லை. அதனால் தானோ என்னவோ உணவுக் கலப்படம் உறுதியாகத் தடுக்கப்படவில்லை.  உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம், இந்தியாவில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், நுகர்வோரான பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.  மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்- 2006 விரைவில் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் இந்தச் சட்டத்தை மருந்து மற்றும் உணவு நிர்வாகத் துறை வழியே நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சட்டம், தமிழகம் உள்பட சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.  இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் கள அலுவலர்களாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும், மாவட்ட அளவிலான கண்காணிப்புப் பொறுப்பில் (DESIGNATED OFFICER) டி.ஓ-க்களும் செயல்படுவர். மாநில அளவிலான கண்காணிப்புப் பொறுப்பு உணவு ஆணையர் நிலையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.  இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஊராட்சி, நகராட்சிகள் தொழில் உரிமம் வழங்க இயலாது. உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மூலமே மாவட்ட, மாநில அளவில் (விற்பனை அளவையொட்டி) தொழில் உரிமம் பெற வேண்டியிருக்கும்.  பொது சுகாதாரத் துறையில் உணவு அலுவலர் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள (பட்டதாரி நிலை) சுகாதார ஆய்வாளர்களும், துப்புரவு ஆய்வாளர்களுமே வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக செயல்படவுள்ளனர். இதன் மூலம், கூடுதல் பொறுப்பாக ஏற்றிருக்கும் உணவு ஆய்வாளர் பணியை, முழு நேரப் பணியாக ஏற்கவுள்ளனர் தற்போதைய சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள்.  இதையொட்டி, தகுதியான சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் முழு நேர உணவுப் பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்ற விருப்பக் கடிதம் பெறப்பட்டு, விருப்பக் கடிதம் அளித்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சட்டம் அமலாக உள்ள நிலையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்ன? வருங்கால உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் பணி நிலை எப்படி அமையும் என்ற சந்தேகங்கள் மேலெழும்புகின்றன.  உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள, மருந்து மற்றும் உணவுப் பொருள் நிர்வாகத் துறைக்கு போதுமான கிளை அலுவலகங்களுக்கு உள் கட்டமைப்புகள் இல்லை என்பதே இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படை. மருந்து நிர்வாகத் துறைக்கு சென்னையில் (தலைமை அலுவலகம் தவிர்த்து) 3 அலுவலகங்களும், தாம்பரம், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரையில் 2 அலுவலகங்கள் என 14 மண்டல அலுவலகங்கள் மட்டுமே உள்ளன.  மேற்கண்ட மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் மருந்து நிர்வாகத் துறைக்கு தனி அலுவலகங்கள் கிடையாது. புதிய அலுவலகங்கள் அமைக்கப்படாதபட்சத்தில், டி.ஓ-க்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எந்த அலுவலகத்திலிருந்து செயல்படுவது என்கிற பெரும் குழப்பம் நீடிக்கிறது.  இதேபோன்று, தமிழகத்தில் தற்போது உணவுப் பகுப்பாய்வுக் கூடங்கள் 7 மட்டுமே செயல்படுகின்றன. சோதனைக்காக எடுக்கப்பட்ட தோசை மாவில் கலப்படம் உள்ளதா, இல்லையா என்பதைக்கூட உடனடியாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்க இயலாத நிலையே உள்ளது.  இதேபோல, எளிதில் அழுகும் அல்லது வீணாகக் கூடிய பொருள்களின் மாதிரிகளை சோதனைக்கு எடுக்கும் பட்சத்தில், அந்த மாதிரியை உடனடியாக பகுப்பாய்வு செய்ய முடியாவிட்டால், புதிய சட்டம் அடிப்படையிலே பிரச்னைக்குள்ளாகும் என்பதில் ஐயமில்லை. எனவே, புதிய சட்ட நடைமுறையின் போது, மாவட்டத்துக்கு ஓர் பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், தங்கள் சோதனையின் போது எடுக்கப்படும் மாதிரிகளை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்ய முடியும்.  இந்தப் பிரச்னையுடன் வருங்கால உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தங்களின் பணி நிலை குறித்து சந்தேகம் நிலவுகிறது.  துறை மாற்றம் பெற்று உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாகப் பணி ஏற்போருக்கு, பொது சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பணியாற்றிய பணிக் காலத்தை கணக்கிட்டு, பதவி உயர்வு வழங்கப்படுமா? என்பது அந்த அலுவலர்களின் கேள்வி. மிகச் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவடன், உணவுப் பாதுகாப்புப் பணியை ஏற்கும் அலுவலர்களின் அச்சங்களைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்வதைப் பொறுத்தே நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டத்தின் வெற்றி அமையும்.
நன்றி-தினமணி

No comments:

Post a Comment